தமிழகத்தில் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, தற்போது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ சரவணன் இன்று பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது அவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மருத்துவர் சரவணன். 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் எம்எல்ஏ சரவணன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தற்பொழுது அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.