பாஜகவின் 44 ஆவது ஆண்டு நிறைவு நாள் இந்தியா முழுவதும் அக்கட்சியின் சார்பில் கொண்டாடப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக தனது கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு பின் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “1984 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு 2 எம்.பிக்கள் மட்டும் தான் கிடைத்தார்கள். குஜராத்தில் இருந்தும் ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்தும் ஒரு எம்.பி. அப்போது நாடாளுமன்றத்தில் பாஜகவை கேலியும் கிண்டலும் செய்வார்கள். காரணம் 1984 என்பது காங்கிரஸ் சரித்திரத்தில் மிகப்பெரிய வெற்றி. எப்பொழுதெல்லாம் எங்கள் இரண்டு எம்.பி.க்கள் எழுந்து பேசுவார்களோ அப்பொழுதெல்லாம் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.
அப்போது வாஜ்பாய் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, இரண்டு எம்.பி.க்களை கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். காலம் வரும். இந்தியாவை நிச்சயம் ஆட்சி செய்வோம் என்று சொன்னார். எங்கள் பயணத்தை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தொண்டனுக்கும் இருக்கிறது. தற்போது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பாஜக ஆட்சியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். 43 ஆண்டுகளில் எந்த கட்சியும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை பார்த்திருக்க முடியுமா என்றால் முடியாது.
பாஜகவை பொறுத்தவரை 365 நாட்களும் உறுப்பினர் சேர்க்கை நாட்கள் தான். காரணம் மிஸ்டு கால் மெம்பர்ஷிப் முறையை உலகத்திலேயே முதன்முறை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய கட்சி. எந்த ஒரு அரசியல் கட்சியும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விசயம். பாஜகவில் இடையிடையே சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடக்கும். தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.