விருதுநகரில் பா.ஜ.க. வேட்பாளர் ராதிகாவும் சரத்குமாரும் கூட்டாகப் பேட்டியளித்தனர். திருமங்கலம் பார்முலா எடுபடாது என்று ராதிகா பிரச்சாரம் செய்ததைக் குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ராதிகா பதில் கூறாத நிலையில், சரத்குமார் குறுக்கிட்டுப் பேசினார். “பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுவதற்குப் பதிலாக, சிறந்த ஆட்சியைக் கொடுத்து வாக்கு கேட்க வேண்டும்” என்று கூற, ராதிகா சுதாரித்தபடி “அது இனிமேல் நடக்காது” என்றார்.
சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்ததும், அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சரத்குமார் “யார் போய்விட்டார்கள்? யாரோ ஒருவர் கத்திவிட்டார். பிறகு, அவரே மன்னிப்பும் கேட்டார். சமக கட்சியில் இருந்த 96 சதவீதம் பேர் என்னுடன் இருக்கிறார்கள்” என்றார்.
பசுமைப் பட்டாசு என்ற பெயரில் பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த கேள்விக்கு சரத்குமாரே பதிலளித்தார், “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது. ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் கலந்தாலோசித்து வருகிறோம். ராதிகாவால் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது. நான் 28 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். நான் சொல்கிறேன். பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கூற, இடைமறித்த செய்தியாளர்கள் ராதிகாவிடம், ‘இது விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியின் மிக முக்கியமான பிரச்சனை. இதற்குத் தீர்வென்ன?’ என்று கேட்க, சிவகாசியில் பிரச்சாரம் செய்தபோது விரிவாகப் பதிலளித்தார். “பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் இன்னொரு உயிரை இழக்கவிடாமல் தடுத்து நிறுத்தி, அது நடக்காமல் இருப்பதற்குப் பாடுபடுவேன். இன்னொரு உயிர் இங்கே இறக்கக்கூடாது. அதற்காக என்ன செய்யணுமோ, அதைச் செய்வேன். அதற்கு இந்த நாட்டில் நல்ல பிரதமர் இருக்க வேண்டும். ஒரு நல்ல பிரதமர் இருந்தால்தான் நமக்கு நல்லது செய்வார்” என்றார்.
ராதிகாவின் பிரச்சாரத்தைக் கேட்டுக்கொண்டிருந்த சித்துராஜபுரம் சண்முகையா நம்மிடம், “பத்து வருஷமா மோடிதானே பிரதமரா இருக்காரு. அப்படின்னா மோடி நல்ல பிரதமர் இல்லியா? ராதிகாவுக்கு இது கூட தெரியலியே? பட்டாசு பேக்டரில விபத்து நடக்காம எப்படி தடுப்பாங்களாம்? விபத்துல இன்னொரு உசிர போகவிடாம எப்படி நிறுத்துவாங்களாம்? இது என்ன சினிமாவா? பட்டாசு தொழிலோட தன்மை தெரியாம பேசுறாங்க” என்று புலம்பினார்.