நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் வேலூரில் பாமக வேட்பாளர் கடத்தப்பட்டதாக திமுகவினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''வேலூர் மாநகராட்சி 24 வட்டத்தில், தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்டச் செயலாளர்கள் இருவர் கடத்திச் சென்று போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.