ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொள்ள, வேட்பாளரை தேர்வு செய்ய, தேர்தல் பணிக்குழு அமைக்க எனப் பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க ஈரோட்டுக்கு 26 ஆம் தேதி நேரில் சென்றார் அதிமுக எடப்பாடி பழனிசாமி. அப்போது ஈரோடு பகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து இன்று மாநில அளவிலான நிர்வாகிகளை ஈரோட்டிற்கு அழைத்து தேர்தல் ஆய்வுக் கூட்டமும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கு வாக்காளர் பட்டியல் விவரங்களையும் நேரிலேயே கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது இக்கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசும்போது, "அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர், அதை இமைபோல் காத்த ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கு மக்கள் தான் குழந்தைகள். நாம் தான் பிள்ளைகள். நமது தலைவர்கள் பிள்ளைகளாகிய நம்மிடம் கட்சியை ஒப்படைத்து சென்றுள்ளார்கள். அதை நாம் அனைவரும் உணர்ந்து ஒன்றுபட்டு, உழைத்து வெற்றி என்ற மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும்." என்றார்.