
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசு மும்மொழி கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மொழி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது.
இதற்கிடையில், மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக எம்.பிக்களை பார்த்து, இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (undemocratic, uncivilized) என இருமுறை குறிப்பிட்டு பேசினார். மத்திய அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக, தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “திமுக வரலாற்றியிலேயே, தமிழ்நாட்டு வரலாற்றியிலேயே ஒரு மத்திய அமைச்சரை பார்த்து நாவடக்கத்தோடு பேச வேண்டும் என்று சொன்ன ஒரே ஆண்மகன், கலைஞருடைய திருமகன் மு.க.ஸ்டாலின் தான். வட இந்தியாவில் மக்கள் தொகை குறையவே இல்லை, இருமடங்காகிவிட்டது. மக்கள் தொகையை குறைத்தால் தான் பணம் என்று தானே மத்திய அரசு சொல்ல வேண்டும். ஆனால், யார் பிள்ளை பெற்று கொண்டார்களோ அவர்களுக்கு பணம், பிள்ளை பெற்காதவதற்கு பணம் இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இது என்ன நியாயம்? என்று கேட்கிறோம்.
இந்தியை படிப்பதும், படிக்காததும் எங்களுடைய இஷ்டம். நீ எப்படி இந்த நாட்டில் குடிமகனோ, அதே போல் தான் நானும் இந்த நாட்டின் குடிமகன். எங்களை படிக்க சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இதை கேட்டால், நீங்கள் எல்லாம் காட்டுமிராண்டி என்று அந்த அமைச்சர் சொல்கிறார். நாங்களா நாகரிகமற்றவர்கள்; கங்கை கொண்டவன், கடாரம் கொண்டவன் தமிழன். ஒருத்தனுக்கு ஒருத்தி இது தான் தமிழ்நாட்டின் நாகரீகம். அப்படிப்பட்ட கற்பு உள்ள நாடு இது. ஆனால், வடநாட்டில் 5 பேர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். நீங்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த நேரத்தில் தமிழர்கள் உலக நாடுகளோடு தொடர்பு கொண்டார்கள். ஒழுங்காக குளிக்காதவர்கள் எங்களைப் பார்த்து நாகரிகம் பற்றி பேசுகிறார்கள். நாற்றம் எடுத்த நாகரிகத்திற்கு சொந்தமானவர்கள் நம்மை நாகரிகமற்றவர்கள் என்பதா?” என்று ஆவேசமாகப் பேசினார்.