
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். ஆனால், புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.2,152 நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ரூ.10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழியை கொண்டு வரும் புதிய கல்வி கொள்கை திட்டத்திற்கு கையெழுத்திட மாட்டேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மொழி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு நிதியை வாரி வழங்கியுள்ளது
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (14-03-25) தாக்கல் செய்தார். இதில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தாம்பரத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கபடும். சென்னை மாநகராட்சி ரூ.200 கோடி அளவிலும், கோவை மாநகராட்சி ரூ.120 கோடி அளவிலும், திருச்சி மாநகராட்சி ரூ.100 கோடி அளவிலும் மற்றும் திருப்பூர் மாநகராட்சி ரூ.100 கோடி அளவிலும் நகர்ப்புற நிதிப்பத்திரங்கள் வாயிலாக கூடுதல் நிதி ஆதாரங்கள் திரட்டுவதன் மூலம் நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றிட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை, திருச்சி, ஈரோடு, கோவையில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க ரூ.400 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 138 ஊரக கூட்டுகுடிநீர் திட்டம் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சுமார் 76,000 மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சீராக குடிநீர் விநியோகித்திட சுற்றுக்குழாய் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய ரூ.675 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். புதிதாக அமையும் நகரத்தில் சர்வதேச தரத்தில் அனைத்து கட்டமைப்புகளும் மேற்கொள்ளப்படும். புதிய நகரத்தை சென்னையுடன் இணைக்கும் மெட்ரோ வசதிகள் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 570 கி.மீ சாலைகள் ரூ.486 கோடியில் தரம் உயர்த்தப்படும். கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடியில் சாலைகள் தரம் உயர்த்தப்படும். மதுரை மாநகராட்சியில் ரூ.130 கோடியில் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.

மகளீருக்கு விடியல் பயணம் திட்டத்தின் மூலம், பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.888 சேமிக்க முடிகிறது என மாநிலத் திட்டக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்திட்டத்திற்காக மானியத் தொகை ரூ.3600 கோடி 2025-2026 ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்படும். இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெற்றிடாத, தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுமை பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை சென்ற கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து கூடுதலாக 40,276 மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். வரும் நிதியாண்டில் இந்த திட்டத்தினை செயல்படுத்திட ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் ரூ.77 கோடி மதிப்பீட்டில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடி மதிப்பீட்டில் 3 மாணவியர்கள் விடுதிகள் அமைக்கப்படும். 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியவர்களுக்காக சென்னை, திருப்பூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அன்புசோழைகள் அமைக்கப்படும்.
வரும் 2025-2026 நிதியாண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பை உருவாக்கிட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நகர்ப்புற பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உயர்கல்வி பயில தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். மும்மொழி கொள்கையை ஏற்காததால் ரூ.2,152 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது. சமக்ரஷசிக்ஷா அபியான் திட்டத்துக்கு ஒன்றிய அரசு வழங்காததால் மாநில அரசே நிதியை விடுவித்தது. எந்த காலத்திலும், மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்காது. ஒன்றிய அரசு நிதியை வழங்காவிட்டாலும் கொள்கையில் உறுதியோடு இருப்போம். 2000 பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் உருவாக்கப்படும். 172 முதுநிலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவர். பழங்குடியின மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 2,676 அரசுப் பள்ளிகளில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். சேலம், கடலூர், திருநெல்வேலியில் 1 லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகங்கள் அமைக்கப்படும். தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டங்களை செயல்படுத்த, பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.