
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (14-03-25) தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செய்தார்.
பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மழலை குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், காலை உணவுத்திட்டம் என தமிழ்நாடு அறிமுகப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை இந்திய நாடு மட்டுமல்ல, உலக நாடுகள் வியந்து பாராட்டுகிறது. இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடியாக செயல்படுகிறது. இருமொழிக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் சர்வதேச அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். பன்முக வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு வீறு நடை போடுகிறது. இந்த நூற்றாண்டு பயணம் வெற்றிகரமானது என எதிர்காலத்தில் தடைகளை தாண்டி வளர்ச்சிகளை நோக்கி மேலும் எழுச்சியுடன் செல்ல வேண்டிய தேவையினை குறிக்கிறது. எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது.
காலந்தோறும் அறிஞர்களின் பெரு முயற்சியாலும், பல கல்வி நிறுவனங்களில் முன்னெடுப்பினாலும் இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பன்னாட்டு சென்னை புத்தக கண்காட்சியில் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பேசப்படும் 28 வெவ்வேறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்திட பன்னாட்டு பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதை தொடர்ந்து, 45 பல்வேறு உலக மொழிகளில் கூடுதலாக மொழி பெயர்க்கப்படும் போது 193 உலக நாடுகளில் அனைத்து அலுவல் மொழி பெயர்க்கப்பட்ட பெருமையினை திருக்குறள் பெரும். வான்புகழ் வள்ளுவத்தை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உயரிய மொழி பெயர்ப்பு திட்டத்தை பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகம் எதிர்வரும் 3 ஆண்டுகளில் நிறைவேற்றிட ரூ.135 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திடும் மாபெரும் திட்டத்தினை 20க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பன்னாட்டு அளவிலான முன்னணி பதிப்பகத்துடன் இணைந்து கூட்டு வழியிடாக செயல்படுத்தும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டிற்கு 100 நூல்கள் வீதம் 500 ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்களை பதிப்பிக்கும் முயற்சியில் முதற்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் மற்றும் உயர்நுட்ப நூல்களை துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் தமிழ் மொழியில் உடனுக்குடன் பதிப்பாக்கம் செய்திட ரூ. 2கோடி நிதி ஒதுக்கப்படும். பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், அறிய ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளின் கையெழுத்து பிரதிகளை மின்பதிப்பாக்கம் செய்திட வரும் நிதியாண்டில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம் மற்றும் பிற இந்திய நகரங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்களிலும் தமிழ் புத்தக கண்காட்சிகள் இந்தாண்டு முதல் நடத்தப்படும். இதற்கென ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அயலக தமிழக வாரியம் மூலம் தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புற கலைகளில் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இதர இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் உலகத் தமிழ் மையங்களில் பயின்றிடும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கணினி வழித்தேர்வு முறையில் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி இனி ஆண்டு தோறும் நடத்தப்படும். உலக அளவிலான வெற்றியாளர்கள் மட்டுமின்றி தேசிய மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்குமான மொத்த பரிசுத்தொகையாக ரூ.1 கோடி வழங்கி சிறப்பிக்கப்படும்.
அகரம் தமிழ் மொழிகளில் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்படும். தமிழ் பண்பாட்டின் சிறப்புகளை உலகறிய செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக எதிர்வரும் 2025-2026 ஆண்டின் தமிழ்நாட்டின் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடியில் உள்ள பட்டணமருதூர், தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும். பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்து வழி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மாமல்லபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் உருவாக்கப்படும்
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் நோக்கத்துடன் சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வருகின்றன. அதை தொடர்ந்து, 2025-2026 ஆண்டு 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3,500 கோடி மதிப்பில் கட்டும் பணிகள் தொடங்கப்படும். முதல்வரின் கிராமச் சாலைகளில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-2026 ஆண்டு 6,100 கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். கிராம மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் தொடர் பராமரிப்புக்கென ஒவ்வொரு ஆண்டும் நிதிக்குழு மானியத்தில் இருந்து 2025-2026 ஆண்டிற்கு ரூ.120 கோடி விடுவிக்கப்படும். அனைத்து கிரம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1,087 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளச்சேரி மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் சந்திப்பு வரை 3 கி.மீ நீளத்திற்கு ஒரு மேம்பாலம் ரூ.310 கோடி மதிப்பில் அமைக்கப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ.3,796 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. அனைத்து நகர்ப்புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.