தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2-ம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18ஆம் தேதி 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் வருகிற மே 19ஆம் தேதி தமிழகத்தில் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.இதில் ஆட்சியை கைப்பற்ற அணைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கள பணிகளில் இறங்கி உள்ளனர். அணைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ள நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற தகவல் பரவி வருகிறது.
இது பற்றி அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்த போது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த போது அவருக்கு ஆதரவாக வந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் மறுக்கப்பட்டதே காரணம் என்று கூறி வருகின்றனர். இதில் ஓபிஎஸ் பிரிந்து வந்த போது அவருக்கு ஆதரவாக வந்த கோபாலகிருஷ்ணனுக்கும்,முத்துராமலிங்கதுக்கும் சீட் கிடைக்கும் என்ற நிலையில் ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கியதில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.மேலும் ஒரு மாவட்ட செயலாளர் அவருக்கு வேண்டியவர்களுக்கு சீட் வாங்கி தருகிறார் இவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் அவரது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி தர முடியவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்கு எம்பி ‘சீட்’ வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை தங்களுக்கு சீட் பெற காட்டவில்லை என்றும் கூறியுள்ளனர்.இதனால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிருப்தியாளர்கள் சற்று ஒதுங்கியும், கடமைக்கும் பங்கேற்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் சிலர் மே 23ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் முடிவை பொறுத்து திமுக மற்றும் தினகரன் கட்சிக்கு செல்லப் போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.