
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று (13-03-25) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மாநிலத்தின் உரிமைக்காக எந்த காலத்தில் திமுகவினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைத்தனர். இது போன்று திமுகவினர் எப்போது ஸ்தம்பிக்க வைத்தனர். தமிழ்நாட்டில் திமுக சார்பில் எம்பிக்களை பெற்றார்கள். ஆனால் தமிழகத்திற்கு என்ன உரிமைகளை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் காப்பாற்றினார்கள்.
எந்த ஒரு உரிமையும் காப்பாற்றப்படவில்லை. இந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு பெற்ற கடன் 4 லட்சத்து 18 ஆயிரம் கோடி கோடி ரூபாய் ஆகும். அப்படி என்றால் எப்படிப்பட்ட நிர்வாகத் திறமையற்ற அரசு இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டுள்ளது. நான்கு ஆண்டு ஆட்சி குறித்து இபிஎஸுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாங்கள் விவாதத்துக்கு தயார் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கின்றோம். ஈபிஎஸ் அழைத்தார் என்று சொன்னால், நானே விவாத மேடைக்குச் சென்று அவருக்கு பதில் கொடுக்க தயாராக இருக்கிறேன். இந்த அரசு செய்திருக்கிற புரட்சிகரமான திட்டங்களை பட்டியல் போட்டு விளக்கவும் தயாராக இருக்கிறோம். கட்சியை பா.ஜ.கவுக்கு அடகு வைத்துவிட்டு நான்கரை ஆண்டு காலம் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கி போவதில்லை, அடமானம் வைப்பதும் கிடையாது” என்று தெரிவித்தார்.