ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசத்தை வளர்க்கப் பெரும் பாடுபட்ட, ஏங்கல்ஸின் 200 -ஆவது பிறந்த தினத்திற்கு, பூ தூவி மரியாதை செலுத்திவிட்டுப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக, மத்திய அரசு மாபெரும் யுத்தத்தை தொடங்கியுள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும்.
'ஒரே தேர்தல்' என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. 'ஒரே நாடு', 'ஒரே மொழி', 'ஒரே தேர்தல்' எனக் கூறுவது சர்வாதிகாரத்தனமானது. இதை மத்திய அரசு, தன் செயல்பாட்டின் மூலம் திணிக்கப் பார்க்கிறது. நலத்திட்டப் பணிகள் செய்ய முடியாமல் போகிறது எனப் பிரதமர் கூறுவது வெறும் காரணங்கள்தானே தவிர, அவர்களின் நோக்கம் வேறு.
இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் ஒரு போதும் மக்களின் இழப்பை ஈடு செய்யாது. அடிப்படையில், செய்ய வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு திட்டமிட்டே உச்சநீதிமன்றம் மூலம் மறுத்துள்ளது. இட ஒதுக்கீடு என்பதை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியோடு இருக்கிறது. இவ்வாறு கூறினார்.