Skip to main content

“ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் தமிழக முதல்வர் போராடுவார்” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 13/03/2025 | Edited on 13/03/2025

 

Minister I. Periyasamy's speech says Tamil Nadu Chief Minister will fight whether he is in power or not against bjp

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ எனும் தலைப்பில் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திண்டுக்கல் தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான இ.பெ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா வரவேற்புரை ஆற்றினார். அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், எம்.மார்கிரேட் மேரி,  மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, சிவகுருசாமி, ராமன், பிள்ளையார் நத்தம் முருகேசன், ரெட்டியார்சத்திரம் மணி, நிலக்கோட்டை சௌந்தரபாண்டியன், மணிகண்டன், கொடைக்கானல் கருமலைப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் வயலூர் கிருஷ்ணமூர்த்தி பேசினார். 

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், “மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு, எதிர்க்கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மொழி முதற்கொண்டு பல பிரச்சனைகளை கிளப்பி மக்களை திசை திருப்புகின்றனர். காரணம் மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி நிலையான ஆட்சி கிடையாது. பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார், லாலு பிரசாத் இணைந்து ஆட்சியை அமைத்துவிட்டால் பாஜக மைனாரிட்டியாகவும், இந்தியா கூட்டணி மெஜாரிட்டியாகவும் வந்து விடுவார்கள். திண்டுக்கல்லில் இரவு நேரத்தில் ஒரு பெண் தனியாக நடந்து சென்றால் ஒரு துரும்பு கூட அருகில் வராது இதுதான் தி.மு.கவின் ஆட்சி. பெண்களுக்கான பாதுகாப்பான ஆட்சி” என்றார். மேலும் அவர், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே உள்ளது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள மக்களை கேட்டால் ஹிந்தி என்றால் என்ன? என்று கேட்பார்கள். எங்களுக்கு தாய் மொழி தமிழ், அதுதான் ஆட்சி மொழியாக வரவேண்டும், அதுதான் எங்கள் லட்சியம் என கொள்கை முழக்கமிட்டவர் முத்தமிழறிஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். 

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மாநிலங்களுக்காகவும் சேர்த்து நமது முதலமைச்சர் மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலமும் போராட முன் வரவில்லை என்றாலும் நமது முதலமைச்சர் போராடி வருகிறார். தமிழக முதல்வர் இந்தியாவில் இருக்கக்கூடிய பாசிச ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், கொள்ளை புறமாக வந்து ஒரே மொழி, ஒரே ஆட்சி கொண்டு வரவேண்டும் என நினைக்கின்றனர். அது எப்பொழுதும் நடக்கவே நடக்காது. பலமொழிகள், பல சமூக மக்கள் இருக்கும் இந்தியாவில் இது முடிவே முடியாது. ஒரே இந்தியா என்று எப்படி அறிவிக்க முடியும். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரைக் கொடுத்து சுதந்திரம் பெற்று கொடுத்த சமூகம், சிறுபான்மை சமூகம் என்பதை மறந்து விடக்கூடாது. சிறுபான்மை மக்களை காப்பாற்றியது என்ற மகுடம் தி.மு.கவுக்கு தான் உள்ளது. ஜவஹர்லால் நேரு ஹிந்தி விரும்புகிறவரை திணிக்க மாட்டோம் என பாராளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்துள்ளார். 

Minister I. Periyasamy's speech says Tamil Nadu Chief Minister will fight whether he is in power or not against bjp

தமிழ் மொழியை காப்பதற்காக தமிழ்நாட்டில் 8 கோடி மக்களும் எங்கள் தமிழக முதல்வர் பின்னால் தான் வருவார்கள். அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை, தேவையும் இல்லை. 3வது மொழியாக சமஸ்கிருதமோ, ஹிந்தியோ படிக்க முடியவே முடியாது. புதிய கல்விக் கொள்கைக்கு நமது முதலமைச்சர் சம்மதம் தெரிவிக்கிறோம் என கூறவில்லை. நாம் எப்போது அவ்வாறு கூறினோம். புதிய கல்விக் கொள்கை ஏற்க முடியாது என்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து நிதியை மறுத்து வருகிறார்கள். மத்திய அரசு நமக்கு தர வேண்டிய ரூ.2000 கோடி நிதியை நிறுத்தியுள்ளனர். கூட்டாட்சி தத்துவம் உள்ள நாட்டில் கல்வியில் மாநிலத்திற்கும் உரிமை உள்ளது. நிதியை பொறுத்தவரையில் இன்று இல்லை என்றாலும் நாளை கொடுத்து தான் ஆக வேண்டும். இல்லை என்றால் இந்தியாவில் ஆட்சி தொடர முடியாது. நவோதயா பள்ளிகள் ஹிந்தியை திணிப்பதற்காக கொண்டு வந்தனர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் எத்தனை ஆயிரம் கோடி கொடுத்தாலும் நவோதயா பள்ளி தொடங்க முடியாது என்று கூறினார். அதேபோல் தற்போது புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முதலமைச்சர் கூறி வருகிறார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர், மொழிக் கொள்கையை எப்படி கடைப்பிடித்தாரோ அதேபோல் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரு கட்டத்திற்கு மேலே வீரமிக்க முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். 

பாராளுமன்றத்தில் மக்கள் தொகை கணக்கடுப்பு எடுக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டில் பாராளுமன்றங்கள் குறைக்கப்பட வேண்டும், இந்தியாவில் மூன்று 8 போட வேண்டும் என நினைக்கின்றனர். பாசிசம் சர்வாதிகாரத்திற்கு எதிர்த்து போராடுகின்ற வீரம் தமிழ்நாட்டிற்கு தான் உள்ளது. தமிழக முதல்வர் 365 முதல் 3000 நாட்களாக இருந்தாலும் போராடுவார். ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் போராடுவார். நீட் தேர்வு வருவதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி. நீட் தேர்வை தமிழ்நாட்டில் விட்டு தூக்கி எறிவோம் அதற்கான வெகு காலம் இல்லை” என்று பேசினார். இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், ஆனந்த், பஜீருல்ஹக், சேகர், ஜானகி ராமன், சந்திரசேகரன், ஜான் பீட்டர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ். பொருளாளர் சரவணன், அகரம் மணி உள்பட மாமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள், மாவட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களுடன் கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்களும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்