
மத்தியப் பிரதேசம் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ளது பாரி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து அம்பேத்கருக்கு சிலை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டனர். அதன்படி கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக நிதி திரட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து 1.5 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலையை வாங்கி வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி பாரி கிராமத்தில் 1.5 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை கிராத்தில் நிறுவப்பட்டது. பின்பு அந்த சிலைக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிலையில் புதிதாக நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை திடீரென மாயமாகியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிர படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “அம்பேத்கர் சிலையைத் திருடியவர்கள் விரைவில் கைது செய்யப்பாடுவார்கள். அதற்கான தீவிர விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை நிறுவி இரண்டு நாட்களே ஆன நிலையில் தற்போது சிலை காணாமல் போயிருப்பது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.