
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (14.03.2025) தமிழக சட்டப்பேரவையில் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்யவுள்ளார். இத்தகைய சூழலில் தான் தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (13.03.2025) வெளியிட்டார். அதே சமயம் பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். அதோடு ரூபாய் (₹) என்ற அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதைக் குறிக்கும் வகையில் இலச்சினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் அதிமுக சார்பில் 37 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர். அப்போது நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தோம். காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசைப் பணிய வைத்தோம். காவிரி மேலாண்மை குழு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து அதிமுக சார்ப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் திமுகவினர் சேரவில்லை. மாநிலத்தின் உரிமைக்காக எந்த காலத்தில் திமுகவினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அதிமுகவினர் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைத்தனர். இது போன்று திமுகவினர் எப்போது ஸ்தம்பிக்க வைத்தனர்.
தமிழ்நாட்டில் திமுக சார்பில் எம்பிக்களை பெற்றார்கள். ஆனால் தமிழகத்திற்கு என்ன உரிமைகளை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் காப்பாற்றினார்கள். எந்த ஒரு உரிமையும் காப்பாற்றப்படவில்லை. தற்பொழுது ரூபாயில் இருந்த முத்திரையை எடுத்துள்ளனர். சுதந்திரம் பெற்றதில் இருந்து 75 வருட காலமாகத் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி என இருந்தது. இது காங்கிரஸ்,திமுக, அதிமுக அரசுகளைச் சேர்த்துக் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு வரை உள்ள கடன் ஆகும். ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு பெற்ற கடன் 4 லட்சத்து 18 ஆயிரம் கோடி கோடி ரூபாய் ஆகும். அப்படி என்றால் எப்படிப்பட்ட நிர்வாகத் திறமையற்ற அரசு இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டுள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.