
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் ரத்த அழுத்தம், உப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்ற நோய் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்புகளை பரிசோதனையின் மூலம் அறியும் சுகாதாரத் துறையினர், பொதுமக்களுக்கு தினசரி மாத்திரைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை நகரில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, நோய் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மாதம் மாதம் மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இப்படி ஒவ்வொரு நலவாழ்வு மையத்திலும் சுமார் 500 பேர் மாதம் மாதம் மாத்திரை வாங்கி வருகின்றனர். ஆனால் புதுக்கோட்டை நகரில் உள்ள கீழ 4 ஆம் வீதியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு மாத்திரை வாங்க வரும் நபர்களுக்கு கடந்த 15 நாட்களாக மாத்திரை இல்லை என்ற பதிலை மட்டுமே சொல்லித் தொடர்ந்து திருப்பி அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.
முறையான பதிலை சொல்லாமல் நலவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் அவர்களை அலைக்கழித்து வருவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படி கடந்த 15 நாட்களாக மாத்திரை வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய முதியவர் ஒருவர், “எனக்கு சர்க்கரை, பி பி, உப்பு இருக்கு. மாதா மாதம் கீழ 4 ம் வீதி நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பரிசோதனை செய்து நோட்டு போட்டு மாத்திரை வாங்குவேன். உப்புக்கு எப்பவும் மாத்திரை இருக்காது, வெளியே தான் வாங்குவேன். ஆனால் இப்போ 15 நாளா நானும் போறேன் மாத்திரை இல்லைன்னு சொல்லி காமராஜபுரம் மையத்திற்கு போங்கனு சொலறாங்க, அங்கே போனா நீங்க எங்க ஏரியா இல்லைனு திருப்பி அனுப்புறாங்க. சரி பழைய மருத்துவமனையில் உள்ள மையத்திற்கு போனால் வயசானவர் வந்துட்டிங்க இப்போ 5 நாள் மாத்திரை வாங்கிட்டு போங்க இனிமேல் உங்க ஏரியா மையத்துலயே வாங்கிக்கங்க என்று சொல்லிட்டாங்க. இப்போ மாத்திரை இல்லாமல் தவிக்கிறேன். இது போல வயதானவர்கள் நிறைய பேர் அலையுறாங்க..” என்றார்.
நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் ஏற்பட்டிருக்கும் மாத்திரை பற்றாக்குறையை போக்கி நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் மாத மாத்திரை கிடைக்கும் வகையில் அரசு வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.