
கடலூர் அருகே திருமணமான சில நாட்களிலேயே கணவனுக்கு குளிர்பானத்தில் மனைவி விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மனைவியை பழிவாங்குவதற்காக கணவனே விஷம் அருந்தியது தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் அயன்கருவேப்பம்பாடி பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அப்பெண் கலையரசனை பிடிக்கவில்லை என கூறியதாகவும், திருமணத்திற்கு முன்பு வேறு ஒருவரை காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முதல் இரவு நேரத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி தன்னுடைய மனைவி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையிலிருந்த கலையரசன் வெளியிட்டிருந்த வீடியோவில்,'என்னுடைய மனைவி குளிர்பானத்தில் விஷம் கொடுத்துவிட்டார். அதன் காரணமாகத்தான் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறேன்' என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கலையரசன் குற்றம்சாட்டிய பெண்ணிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விஷம் கொடுத்ததற்கும் அப்பெண்ணிற்கும் சம்பந்தம் இல்லை என தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து புலனாய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் கலையரசனே அங்குள்ள உரக்கடைக்கு சென்று பூச்சி மருந்தினை வாங்கி வந்த சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. கலையரசன் விஷம் சாப்பிட்டதாக கூறப்படும் நாளன்று யாரிடமெல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என ஆராய்ந்த பொழுது, அவருடைய நண்பர் ஒருவரிடம் பேசியது தெரியவந்தது.
அவரையும் கூப்பிட்டு போலீசார் விசாரித்த பொழுது கலையரசன் தன்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தான் விஷம் அருந்ததிதாக தெரிவித்தார். நேரில் வந்து பார்த்தபோது கையில் வைத்திருந்த பூச்சி மருந்து பாட்டிலை என்னிடம் காட்டினார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கும் அதே நேரத்தில் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலையரசன் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.