நாங்குநேரி இடைத்தேர்தலின் பொருட்டு பிரச்சாரத்திற்காக வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இரண்டாம் நாளான இன்று தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திரண்ட மக்களிடம் பேசியதாவது,
கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்க கூடியவர்கள் விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாமல் இருந்து வருகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவிக்குழு கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி, இந்த ஆட்சியில் சுய உதவி குழு இருக்கிறது ஆனால் மானிய கடன் வழங்குவதில்லை.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும், 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததும் கலைஞர் தான். பெண்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது தி.மு.க. தற்போது தமிழகத்தில் நடக்கும் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாடத்தை, எச்சரிக்கையைப் புகட்ட வேண்டும்.
ஆட்சியை காப்பாற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது, என்பதற்காக கோடி கோடியாக பணம் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை பிடித்து வைத்துள்ளனர். அதற்கு பணம் கொடுக்க ஊழல் செய்து கொண்டு இருக்கின்றனர் என்று நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார் ஸ்டாலின்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அதனை பற்றி கவலைப்படாத இந்த அரசுக்கு பாடம் புகட்டுங்கள் என்றார். ஆளும் கட்சியினர் தான் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும், ஆனால் எதிர்கட்சியாக இருக்க கூடிய நாங்கள் தான் ஆளும் கட்சி செய்ய வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறோம். அனைத்து துறைகளிலும் 40 முதல் 50 சதவீதம் கமிஷன் அடிக்கப்படுக்கிறது என்றார் சிவந்திபட்டியில் ஒரு சதவீதம் ஓட்டு அதிகமாக வாங்கியதால், அ.தி.மு.க. ஆட்சி அமைந்து விட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியவர் ஓ.பன்னீர்செல்வம், தியானம் செய்து ஆவியுடன் பேசிவிட்டதாக கூறினார்.
தமிழகத்தில் முதல்வராக இருந்த காமராசர், எம்.ஜி.ஆர்., அண்ணா, கருணாநிதி உட்பட அனைவரும் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு இறந்தனர், அவர்கள் இறப்பில மர்மமில்லை, ஆனால் ஜெயலலிதா உயிரிழப்பில் மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றிக் கவலைப்படுகின்ற ஆட்சி தமிழகத்தில் இல்லை என்று பேசினார் ஸ்டாலின்.