
தேர்தல் காலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. கோவை சம்பவத்தை தொடர்ந்து அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அறந்தாங்கி தொகுதியில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக (திருநாவுக்கரசர் எம்.பி.யின் மகன்) ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி நேற்று இரவு வந்துள்ளார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள அம்மாபட்டினம் கிராமத்தில் பிரச்சாரம் செய்தபிறகு கோட்டைப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது மீனவ கிராமமான புதுக்குடியில், பாஜக- அதிமுகவினர் திரண்டு நின்றுள்ளனர். அப்போது நவாஸ்கனியுடன் வந்த வாகனங்களுக்கு வழிவிடாமல் நின்றதால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி திடீர் கைகலப்பு நடந்துள்ளது.
அதில், சில வாகனங்கள் தாக்கப்பட்டதுடன் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த போலீசார் பாதுகாப்பாக அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல் செய்ய, பின்னர் அங்கு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் எம்பி’யும் வந்து சமாதானம் செய்துள்ளார். அதே போல ஆலங்குடி தொகுதி பள்ளத்திவிடுதியிலும் திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு எதிராகத் திரண்ட இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தொடரும் இந்தச் சம்பவங்களை பொதுமக்கள் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.