
தமிழக வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் பொன்முடி கடந்த 6ஆம் தேதி (06.04.2024) அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் விலைமாதர்கள் குறித்து பேசியது மக்கள் மத்தியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாக ஆபாசமாக அவர் பேசியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்த பேச்சுக்கு திமுகவிலேயே பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி., அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக அமைச்சர் பொன்முடி பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இந்த விவகாரமும் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அதே சமயம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா எம்.பி. யை வை திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டுருந்தார். இத்தகைய சூழலில் தான் மு.க. ஸ்டாலின் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் மற்றும் விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி முதல்வரை நேரில் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினை அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பெண்களை தரக்குறைவாக, அநாகரீகமாக, நாகூசும் வார்த்தைகளால் அமைச்சர் பொன்முடி பேசி இருக்கிறார்.

அவர் சொன்னதை சொல்வதே அநாகரீகம். உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த ஒருவர், தற்போது வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சராக இருப்பவர், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்பால் பதவி ஏற்றுக் கொண்டவர் பெண் இனத்தை கேவலமாகப் பேசுவது என்பது முறையற்ற செயல். இது ஏற்புடையதல்ல. அமைச்சர் பொன்முடியின் நாகரிகமற்ற பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சர் பதவியில் வைத்துக் கொண்டிருப்பது பெண் இனத்திற்கு செய்யும் துரோகம். எனவே, அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உண்டு என்பதை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.