தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட நிலையில் அவரிடம் 'கே.என்.நேரு பங்காரு அடிகளார் காலுக்கு கீழே அமர்ந்து பேசுவது போன்று வெளியான புகைப்படம்' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''இதுகுறித்து கேள்வி எழுப்புவீர்கள் என்று காலையிலிருந்தே எதிர்பார்த்திருந்தேன். திமுகவிடம் ஒரு மோசமான புரிதல் உள்ளது. மத குருமார்கள், பெரியவர்கள் என எந்த மதத்தினுடைய தலைவர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் எப்படி ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று இவர்கள் பாடமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் எந்த ஒரு தவறும் தெரியவில்லை. கே.என்.நேரு பங்காரு அடிகளாரை சந்தித்துவிட்டு அவருடன் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது. நானாக இருந்தாலும் அதைத்தான் செய்வேன்.
நீங்கள் என்னோட பல புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். மதகுருமார்கள் சேர் போட்டு அருகில் அமர சொன்னால் கூட நான் உட்கார மாட்டேன். தரையில் அமர்ந்துதான் பேசுவேன். ஏனென்றால் இந்த மண்ணின் அற்புதமான மனிதர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அது. எப்படி தந்தை, தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோமோ அதேபோல் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையில் குருமார்களை பார்க்கும்பொழுது அவர்களுக்கு சமமாக நாங்கள் இல்லை.. எங்களை வழிநடத்தும் குருமார்களின் கால்களுக்கு கீழ் நாங்கள் என்பதை உணர்த்துகிறோம். ஆனால் இதை நான் பலஇடங்களில் செய்யும் பொழுது திமுககாரங்க தேவையில்லாம போதனை செய்வாங்க... திமுககாரங்க சொல்வதை அவர்களின் வீட்டில் உள்ளவர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்'' என்றார்.