Skip to main content

அதிமுக ஆட்சி தானாகவே முன்வந்து பதவி விலகிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018


 

mkstalin


தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் ஓர் இருண்ட பக்கத்தை அதிமுக ஆட்சி உருவாக்கி விட்டது. தமிழ்நாட்டை வஞ்சித்து, தொழில்துறையையும் சீரழிக்காமல், இந்த ஆட்சி தானாகவே முன்வந்து பதவி விலகிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

’பலவீனமான தலைமையின் கீழ் செயல்படும் அதிமுக அரசால், தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு வரலாறு காணாத சரிவை சந்தித்து இருக்கிறது’, என வெளிவந்துள்ள மத்திய அரசின் ஆய்வறிக்கை, அதிமுக அரசின் நிர்வாக அவலட்சணத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு கிடைத்த முதலீட்டில் மூன்றில் ஒருபங்கு மதிப்பிலான முதலீட்டைக்கூட 2017 ஆம் ஆண்டில் பெறமுடியாமல், தொழில் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்பும், மாநிலத்தின் முன்னேற்றமும் அதிமுக ஆட்சியில் பெருமளவில் கேள்விக்குறியாகி விட்டதை எண்ணி மிகுந்த கவலையுறுகிறேன்.
 

மத்திய அரசின் “டிபார்ட்மென்ட் ஆப் இன்டஸ்ட்ரியல் பாலிஸி அண்ட் ப்ரமோஷன்” துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில் 1,574 கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே பெற்று மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எல்லாம் பின்னால் தமிழ்நாடு இருப்பது, மாநில தொழில்துறை வளர்ச்சி அத்தியாயத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைகுனிவாக இருக்கிறது. கழக ஆட்சி இருந்தபோது, தொழில் தொடங்க மாநிலத்தை நாடிவந்த முதலீட்டாளர்கள் எல்லாம் இன்றைக்கு அண்டை மாநிலங்களுக்கு ஓடிப் போகிறார்கள் என்பது மனவேதனை அளிப்பதாக இருக்கிறது. 2017-ஆம் வருடத்தில் போடப்பட்ட 62 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், ஐம்பது சதவீதம் கூட முதலீடுகளாக மாற்ற முடியாமல் தவிக்கும் அதிமுக அரசு, 9 நிறுவனங்களிடமிருந்து மட்டுமே முதலீடுகளை பெற முடிந்திருக்கிறது என்ற தகவல், செல்லரித்துப் போன நிர்வாகத்தின் அடையாளமாக இருக்கிறது.

மாண்புமிகு முதலமைச்சரும், தொழில்துறை அமைச்சரும் முதலீடுகளை கவருவதற்கான எவ்வித முயற்சியையும் எடுக்காமல், முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க நம்பிக்கையையும் கொடுக்காமல், ஊழல் புரிவதற்காக பதவியில் நீடித்தால் போதும் என்ற மனநிலையில் மாநிலத்தின் நலனை அடகுவைப்பது கடும் கண்டனத்திற்குரியது. கமிஷன் கலாச்சாரத்தால் ஏற்கனவே பல தொழில் முதலீட்டாளர்களை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துவிட்ட இந்த ஆட்சியாளர்கள், மறுசீரமைக்க முடியாத இன்னும் என்னென்ன அழிவுகளை ஏற்படுத்திவிட்டுப் போகப் போகிறார்களோ என்ற அச்சமே நெஞ்சைக் குடைகிறது. குறிப்பாக, “பலவீனமான அரசாக இருப்பதால் முதலீட்டாளர்களை தமிழ்நாடு அரசால் கவர முடியவில்லை” என்று அசோசம் பொதுச்செயலாளரே பேட்டியளித்திருப்பதைப் பார்த்தால், தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றில் அதிமுக ஆட்சி ஓர் இருண்ட பக்கத்தை உருவாக்கி விட்டது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.

 

“எடுபிடி” அரசாக செயல்படுவதும், அமைச்சரவையில் உள்ளவர்கள் யாருக்கும் எவ்வித கூட்டுப்பொறுப்பும் இல்லாமல் தான்தோன்றித் தனமாகப் பேட்டியளிப்பதும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ள டெண்டர்களை பங்கிட்டுக் கொள்வதும், ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தும், காவல்துறை நிர்வாகம் கறைபடிந்தும் நிற்பது, மாநில உரிமைகளை காலில் போட்டு நசுக்கினாலும் ஏற்றுக் கொண்டு, மத்திய அரசுக்கு அயராமல் காவடி தூக்குவதும், அதிமுக ஆட்சியாளர்களின் குணாதிசயங்களாக மாறிவிட்டது மட்டுமல்ல, ஒரே நிர்வாகப் பணியாகவே மாறிவிட்ட கொடுமை அரங்கேறிவிட்டது.

 

பொறுப்பற்ற முறையில் மாண்புமிகு முதலமைச்சரும், அமைச்சர்களும் ஆட்சி செய்வதால் “பொறுப்புள்ள அரசு மாநிலத்தில் இல்லை” என்ற செய்தி நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை சென்றடைந்து விட்டது. அதனால், “முதலீட்டாளர்களை ஈர்க்க துபாயில் சாலை கண்காட்சி நடத்துவதோ”, “இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாட்டை கூட்டுவதோ”, தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு எவ்வித விமோசனமும் பிறக்கப்போவதில்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்விலும் ஓளி வீசப்போவதில்லை.

 

ஆகவே, “அமைதி, வளம், வளர்ச்சி” என்று வெளுத்துப்போன முழக்கத்தை தூக்கியெறிந்து விட்டு, எஞ்சியிருக்கின்ற நாட்களிலாவது முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்கவும், கமிஷன் கலாச்சாரத்தை அறவே தவிர்த்து, புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பொறுப்புள்ள அரசு நிர்வாகத்தை அதிமுக அரசு அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

இன்னொரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கு முன்பு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு தொழில்துறையில் பின்தங்கி விட்டதை மாற்றியமைக்க மாண்புமிகு முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால் தமிழ்நாட்டை வஞ்சித்து, தொழில்துறையையும் சீரழிக்காமல், இந்த ஆட்சி தானாகவே முன்வந்து பதவி விலகிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்