தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி, அப்பணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரு மாதங்களுக்கு முன்பு அவர் விடுவிக்கப்பட்டார். புதிய தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்யபிரதாசாகுவை நியமித்தது இந்திய தேர்தல் ஆனையம்.
மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் பதவி காலியாகவே வைக்கப்பட்டிருந்தது. இரண்டு மாதங்களாக அப்பதவி நிரப்பப்படவில்லை. இந்தநிலையில், தற்போது அப்பதவியை சத்யப்பிரதாசாகுவிடமே கூடுதல் பொறுப்பாக கொடுத்துள்ளது எடப்பாடி அரசு. இத்தகைய முடிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம், "தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி என்பவர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். தலைமைத் தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் தன்னிச்சையாக இயங்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு அவர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரமாட்டார். இப்படிப்பட்ட நிலையில், தமிழக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சத்யப்பிரதாசாகுவிடம் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தைக் கூடுதல் பொறுப்பாக தந்திருப்பது தவறானது. மேலும், தேர்தல் அதிகாரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2018) கூடுதல் பொறுப்பை மிக ரகசியமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் சத்யபிரதாசாகு. அவரிடம் கூடுதல் பொறுப்பு தரப்பட்டிருப்பது தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதன் பின்னணியில் பல வில்லங்கங்கள் இருக்கிறது" என்கிறார்கள் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
விரைவில் பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது ரகசியமாக நடந்திருக்கும் இந்த விவகாரம்.