ஈரோடு தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை கைது செய்ய வேண்டும்,தேர்தல் தகுதி இழக்க செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ ஆற்றல் அசோக்குமார் ஈரோட்டில் ஒரு கிடங்கில் வாக்காளர்களுக்கு தர ஏராளமான புடவைகள் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 200க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவருடைய சொத்து விபரங்களை இதர விஷயங்களையும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ விசாரிக்கை வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட வேண்டும்.
தேர்தல் விதிகளின்படி தேர்தல் அறிவித்த பிறகு எந்த புதிய அறிவிப்பையும் அரசு வெளியிடக் கூடாது. ஆனால், அதை மீறி மோதி அரசு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி உள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜக அரசின் பிடியில் உள்ளது. தமிழக பாஜக தலைவர் கோவையில் இரண்டு விதமாக மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து கட்சிகளும் இந்த குறைபாட்டை சுட்டிக்காட்டி உள்ளன. இருந்தாலும் தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தொலைபேசி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் வேட்புமனு ஏற்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார். அவர் பேசுவது புரியவில்லை. தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் பரவிவிட்டதாக கூறுகிறார். எம்ஜிஆர் காலத்திலிருந்து கஞ்சா கலாச்சாரம் உள்ளது. கஞ்சா போதை வஸ்துக்கள் குஜராத்தில் அதானி துறைமுகம் மூலம் வருகிறது. பாஜக அரசு இளைஞர்கள் அனைவரும் இந்தியாவில் போதை கலாச்சாரத்துக்கு உட்பட இதை அனுமதிக்கிறது. குஜராத்தில் மதுவிலக்கு பேயரளவில் உள்ளது. பர்மிட் இருந்தால் மது வாங்கி குடிக்கலாம். முதலில் அங்கு மதுவிலக்கை கொண்டு வரட்டும். பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கே வலியுறுத்தலாம்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட பணமில்லை என்கிறார். அவரிடம் ஏராளமான பணம் படுக்கையறையிலும் பைகளிலும் உள்ளது. அவரது கணவர் தேர்தல் பத்திர முறைகேடு உலகில் மிகப்பெரிய ஊழல் என்கிறார். கேட்டால் நிர்மலா சீதாராம் இது அவரது கருத்து என்கிறார். இதற்கு என்ன விளக்கம் அவர் அளிப்பார். சுப்பிரமணியசுவாமி அனுபவ வாய்ந்தவர் அவர் மோதி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்கிறார். ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகள் மோதி தலைமையில் சர்வாதிகாரத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்கின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமித்ஷா கூட்டணி நாட்டில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சிறையில் அடைக்கலாம் என்று செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனது உடல்நிலை காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால் ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.