'நவம்பரில் ரஜினி கட்சி தொடங்குவது நிச்சயம்' என ஜுன் மாதத்திலிருந்து செய்'தீ' கிளம்பியது. அதுகுறித்த பல்வேறு கோணங்கள் வெளிப்பட்ட நிலையில், "நவம்பரில் தலைவர் கட்சி தொடங்குவார் என வெளியாகும் செய்திகள் வதந்திதான். எனவே, ரசிகர்கள் யாரும் இதை நம்பவேண்டாம்'' என ர.ம.ம.வின் மூத்த நிர்வாகி சொன்னதாக, கடந்த 5ந் தேதி ஒரு செய்தி பரபரத்தது.
இந்நிலையில், தென்மாவட்ட ரஜினி ரசிகர்களிடையே இரண்டு பகீர் தகவல்கள் வலம் வருகின்றன. உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோசியக்காரரான நாஸ்டர்டாம், 1550 ஆம் ஆண்டிலேயே, "மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தென்முனையில் ஒரு சிறந்த மனிதன் பிறப்பான். அவன் பார்ப்பதற்கு அமைதியாகவும், எளிமை யாகவும் இருப்பான். அவன் அரசனாக விரும்பமாட்டான். ஆனால், ஆட்சியும் அதிகாரமும் அவனைத் தேடிவரும். அவனுடைய சிறப்புகள் பெருகி பிரகாசித்திருப்பான், என 470 ஆண்டுகளுக்கு முன்பு நாஸ்டர்டாம் சொன்ன அந்த சிறந்த மனிதன் நமது தலைவர்தான்'’ -இப்படியொரு வாட்ஸ் அப் தகவல்.
அடுத்ததாக, "தலைவர் தற்போது தனது இல்லத்தில் தமிழக அரசின் ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வுசெய்து வருகிறார். தலைவர் தலைமையில் ஆட்சி அமைந்ததும் அரசு எந்திரங்களின் பயன்பாடு ஏழைகளுக்கு எளிதாகக் கிடைத்திட அந்தந்த துறைகளின் அனுபவமிக்க நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது" இப்படியொரு தகவல். இதெல்லாம் போனவாரம்.
இந்த வாரமோ பொறுமை இழந்த ரசிகர்கள், "அரசியல் மாற்றம் இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை" என தமிழகம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டித் தள்ளிவிட்டனர். இதைப் பார்த்து மிரண்டுபோன ரஜினி, ர.ம.ம.வின் நிர்வாகி சுதாகர் மூலம் "தலைமையின் அனுமதி இல்லாமல் இப்படிப்பட்ட போஸ்டர்களை ஒட்டக்கூடாது" எனக் கடந்த 11 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார். போஸ்டர் ஒட்டக்கூடாது என்ற உத்தரவைப் பற்றியும் ஒரு மெகா சைஸ் போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தி விட்டார்கள் மதுரையில் உள்ள ரஜினி மன்றத்தினர்.
இதற்கிடையே, ரஜினியை நம்பியிருக்கும் சில வி.வி.ஐ.பி.க்களோ, "நவம்பர் 20 ஆம் தேதி சூரசம்ஹாரம். அன்றைய தினம் நல்ல சேதி வரும். அதுவரை பொறுமையா இருங்க'' என ரஜினி மக்கள் மன்ற மா.செ.க்களிடம் கூறி வருகிறார்களாம்.