தமிழக பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவரை விரைவில் நியமிக்க போவதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது பற்றி விசாரித்த போது, தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றார். அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த பாஜக ரேஸில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.
இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நாற்காலியில் உட்காரும் ரேஸில் வானதி சீனிவாசன், கே.டி. ராகவன், கட்சியின் சீனியர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக சொல்கின்றனர். இவர்களில் சி.பிஆர். நம் சீனியாரிட்டியைப் பார்த்து தலைமையே தலைமைப் பதவி தந்தால் ஏற்கலாம் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகின்றனர். ராகவனுக்கு டெல்லியில் செல்வாக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வானதியின் கணவரான சீனிவாசன் மீது சில நிதி மோசடிப் புகார்கள் இருப்பதால், அவர் அபயம் புகுந்திருப்பது நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனிடம் என்கின்றனர். மேலும் நிர்மலாவின் சிபாரிசோடு தலைவர் ரேஸில் வானதி ஓடிக்கொண்டிருக்கிறார் என்றும் கமலாலயத்தில் கூறிவருவதாக தகவல் சொல்லப்படுகிறது.