பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான அழைப்பு விடுக்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அதிமுகவில் இருந்து சென்ற சிலருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்படுவதாகவும் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக சேலம் வந்தார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள், “பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம் தான் என மீண்டும் அதிமுகவில் இணைய கூறி அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகிறதே?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்துப் பேசிய அவர், “நாங்கள் அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒரு சிலரைத் தவிர அனைவருக்கும் மீண்டும் கழகத்தில் இணைவதற்கான அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு இணைவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அது ஜனநாயகம்.
எம்ஜிஆர் அதிமுகவை தோற்றுவிக்கும் போது எவ்வளவு சோதனைகளைச் சந்தித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜெயலலிதா எவ்வளவு சோதனைகளைச் சந்தித்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். இரு தலைவர்களும் சோதனைகளைச் சந்தித்துத் தான் வெற்றி கண்டார்கள். அதிமுக ஒவ்வொரு காலத்திலும் சோதனைகளைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. இறுதியில் வெற்றி கண்டுள்ளது” எனக் கூறினார்.