Skip to main content

பொதுமக்கள் ஒத்துழைத்தால் விரைவில் இயல்பு நிலை திரும்பும்! திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
edappadi palanisamy

 

 

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு பணி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வரவேற்றார். அதைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் மருதராஜ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.

 

அதன்பின் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசும்போது, கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பால்தான் முடியும். அரசு அறிவித்த விதிகளை முறையாக கடைபிடித்தால் விரைவில் கரோனாவிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

 

நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கரோனா பாதிக்கப்பட்டவர்களை அரசு முறையாக பார்த்துக்கொள்கிறது. தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையிலும் தமிழகத்தில்தான் குறைவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே போல் இன்றைக்கு இறப்பு சதவீதம் குறைவுதான். பொதுமக்கள் அரசின் வழிமுறைகளின் படி முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடித்து செயல்பட்டால் நோய் தொற்றை தடுக்க முடியும்.

 

வெளியில் செல்லும்போது பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். இந்த அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. மக்களை காப்பாற்றுவதுதான் அரசின் கடமை. நோய் தொற்று சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உரிய நேரத்தில் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்று ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில்  இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.

 

டாக்டர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த நோய் தென்பட்டுவிட்டால் பலரை இழக்கும் சூழ்நிலை கூட ஏற்படும். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் இருந்து கடைகளுக்கு, மார்க்கெட்டுக்கு செல்லும்போது அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது கைகளை நன்கு கழுவ வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். நாம் இருக்கும் தெருவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் கரோனாவிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

 

அதுபோல் தமிழகத்தில் கரோனா பரிசோதனை படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிமுறைகள்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுகிறேன். பொதுமக்கள் விதிகளை கடைபிடித்து செயல்பட்டால் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் மேலாண்மைப் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. நோய் தொற்று குறித்து தகவல் வெளிவந்தது அம்மாவின் அரசு சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டது.

 

குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் அரிசி, எண்ணெய், பருப்பு போன்றவற்றை மூன்று மாதம் வழங்கியது. தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நவம்பர் மாதம் வரை கூடுதல் அரிசி அரசால் வழங்கப்பட உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை இல்லாத சூழ்நிலை குறித்து அரசின் கவனத்திற்கு வந்தது. அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு போன்றவையும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பினால் அரசின் செலவில் ரயில் உள்பட போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

 

இந்த அரசை பொருத்தவரை எந்த விதத்திலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாணவர் என அனைவரது நலனிலும் அரசு அக்கறை கொண்டுள்ளது, தமிழகத்தில் எந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைக்கு தேவையான நிதியும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவின் பாதிப்பு அரசின் நடவடிக்கைகளால் குறைந்துள்ளது.

 

இந்த மாவட்டத்தில் நூற்பாலைகள் அதிகம் இருப்பதால் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளது. இங்கு புதிய தொழில் தொடங்க மூன்று நிறுவனங்கள் இணைந்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தடுப்பணைகள் கட்டும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்.

 

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் சீனிவாசன்  மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 1530 பயனாளிகளுக்கு 2 கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 775 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 8 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 18 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதுபோல் 8 கோடியே 69 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 42 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவி க்குழுவினர் ஆகியோருடன் தனித்தனியாக கலந்தாய்வு நடத்தினார். இதில் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளி பிரியா மற்றும் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்