கோவை செல்வராஜ் ஏன் இப்படிப்பட்ட முடிவெடுத்தார் எனத் தெரியவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “அதிமுகவிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இனியும் அதில் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளேன். அதே சமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன். ஒருநாளும் அரசியலை விட்டு விலகமாட்டேன். நல்ல முடிவை விரைவில் எடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, “ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஓபிஎஸ் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்த 34ஆவது நாள் அவரை வெளி நாட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறினர். இதை விஜயபாஸ்கரிடமும் தலைமைச் செயலாளரிடமும் கூறிவிட்டேன். அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்றும் கூறினேன் என்று ஓபிஎஸ் சொன்னார். இப்பொழுது இந்தப் பிரச்சனையை ஏன் கோவை செல்வராஜ் பேசுகிறார் எனத் தெரியவில்லை.
அவர் இப்படி ஒரு முடிவு ஏன் எடுத்தார் எனத் தெரியவில்லை. அவர் மீது கோபம் இல்லை. தேவை இல்லாமல் பேசுவது தேவை இல்லை என நினைக்கிறேன். இதுவரை செல்வராஜ் ஓபிஎஸ் உடன் இணக்கமாக நன்றாக இருந்தார். ஏன் இப்படிச் சொல்கிறார் எனப் புரியவில்லை. திராவிட இயக்கத்தில் தொடர்வேன் எனச் சொல்லி இருக்கிறார். கட்சி மாறுகிறாரா இல்லையா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.