
திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (17.09.2024) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருது பாப்பம்மாளுக்கும், அண்ணா விருது அறந்தாங்கி 'மிசா' இராமநாதனுக்கும், பாவேந்தர் விருது கவிஞர் தமிழ் தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி. ராசனுக்கும், கலைஞர் விருது எஸ். ஜெகத்ரட்சகனுக்கும், மு.க. ஸ்டாலின் விருது எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திற்கும் வழங்கினார்.
இதனையடுத்து மு.க. ஸ்டாலின் விருதுபெற்ற எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பேசுகையில், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எனும் போர்முகம் சூழ்ந்துவிட்டது. இனி வரும் ஒவ்வொரு நாளும் கணக்கில் கணிக்கப்பட வேண்டிய காலம். தமிழகத்தில் இருக்கிற அரசியல் சூழ்நிலை தமிழகமெங்கும் உங்களைப்போல் சுற்றிச் சுழன்றவர்கள். எனக்கு 9 தேர்தலில் தலைவரும் நீங்களும் வாய்ப்பு கொடுத்தீர்கள். எனக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவரோடும், உங்களோடும் சென்றுள்ளேன். உதயநிதியோடும் சென்றுள்ளேன்.

உங்களிடத்தில் பொதுமக்கள் காட்டுகிற அன்பு, கட்சித் தோழர்கள் காட்டுகிற விசுவாசம், வேறு எந்த தலைவர்களுக்கும் காட்டுவதில்லை என்பதுதான் உண்மை. யாரை திமுகவில் முன்னிலைப் படுத்தினால் பொதுமக்களைக் கவர முடியுமோ, கழகத் தோழர்களை வெறியோடு கட்சி வேலைகளைச் செய்யச் சொல்லமுடியுமோ?. அவர்களைத்தான் நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். உங்களுக்கும், மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியைத் துணை முதலமைச்சராக்க வேண்டாமா?. பேராசிரியரை விடப் பெரிய மனிதர்கள் நாங்கள் யாரும் இங்கில்லை. பேராசிரியர் உங்களை எவ்வளவு பெரிய மனதோடு துணை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டார்கள். நாங்கள் ஏற்றுக்கொள்வோம், காலம் தாழ்த்தாதீர்கள்” என உருக்கமுடன் பேசினார்.
இந்நிலையில் துணை முதல்வர் பதவி தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம். துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் முடிவெடுப்பார். எஸ்.எஸ். பழனிமாணிக்கமும் நேற்று இதே விருப்பத்தை தெரிவித்து இருந்தார். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நடிகரும், தவெக தலைவருமான விஜய், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய்க்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.