சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், யார் கேட்டது மும்மொழி? 400 பக்க அறிக்கைக்கு நாட்டு மக்களிடம் ஆதரவு கேட்கிறது மத்திய அரசு. கருத்து சொல்ல வேண்டும் என்கிறது. அந்த அறிக்கை ஆங்கிலத்தில் மட்டும் இருக்கிறது. எதற்கு இப்போது மும்மொழி? உத்திரப்பிரதேசத்தில் எத்தனை மொழி படிக்கிறார்கள்? மத்தியப்பிரதேசத்தில் எத்தனை மொழி படிக்கிறார்கள்? ராஜஸ்தானில் எத்தனை மொழி படிக்கிறார்கள்? ஒடிசாவில் எத்தனை மொழி படிக்கிறார்கள். நான் சொல்லுகிற இந்த நான்கு மாநிலத்திலும் அவர்கள் படிக்கும் ஒரே மொழி ஹிந்தி மட்டும்தான். அங்கு இருமொழிகள் கூட அமலில் இல்லை.
17ஆம் தேதி பதவியேற்கிறீர்கள். 19ஆம் தேதி ஒரு கூட்டத்தை கூட்டுகிறீர்கள். என்ன கூட்டம். ஒரே தேசம். ஒரே நாள் தேர்தல். அதற்காக ஒரு சர்வக்கட்சி கூட்டம். ஒரே தேசமா? யார் சொன்னது? நிரூபிக்க ஏனேனும் வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறதா? நான் டெல்லியில் இருப்பவர்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் எண்ணிக்கையில் பெரியவராக இருக்கலாம். ஆனால் நாங்கள் எண்ணத்தில் மேம்பட்டவர்கள்.
17ஆம் தேதி பிரதமர் பதவியேற்று 19ஆம் தேதி ஒரே நாள் தேர்தல் என்பதற்காக சர்வதேச கூட்டத்தை கூட்டியிருக்கிறார். சர்வக்கட்சி கூட்டத்திற்கு எல்லா கட்சிக்கும் அழைப்பு. சேகுவேராவும் போகவில்லை. பிடல் காஸ்ட்ரோவும் போகவில்லை. சேகுவேரா சார்பில், பிடல் காஸ்ட்ரோ சார்பில் ஒரு அமைச்சரும், ஒரு நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள போயிருக்கிறார்கள். உங்களுக்கு இங்க இடமில்லை கெட் அவுட் என்று சொல்லி வெளியே தூக்கி அனுப்பிவிட்டார்கள். இதற்கு பின்னால் சதி இருப்பதை உணர்ந்தீர்களா?
அதிமுக கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அதில், நாடாளும் பிரதமரை வழிமொழிவதற்கு வாய்ப்பு தந்த பிரதமருக்கு நன்றி என்று தீர்மானம். அது வாய்ப்பா? அது சாபம். இதற்கு ஒரு தீர்மானம் போட வேண்டுமா? ஏற்கனவே கொடுத்த ஜெராக்ஸ் காப்பியைத்தான் திரும்ப திரும்ப பிரதமரிடம் தமிழக அரசு கொடுக்கிறது. தமிழக அரசு கொடுக்கும் மனுவை அவர்கள் படிப்பதே இல்லை. ஏன் படிப்பதில்லை. எப்பொழுதும் அடிமைகள் மனுவை அரசர்கள் படிப்பதில்லை. இவ்வாறு பேசினார்.