இந்தியாவை காப்பற்ற வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வந்துள்ளது என திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர்.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், “மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின் செய்த சாதனைகளை பட்டியல் போட்டு டி.ஆர்.பாலு சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம்; கோடிக்கணக்கான மக்களையும் ஆயிரக்கணக்கான கிளைக் கழகங்களையும் கொண்டது. திமுக இல்லாத ஊர் இல்லை. அந்த கட்சிக்கு 50 ஆண்டுகள் தலைமை தாங்கியவர் கலைஞர். உலகில் வேறு யாரும் அவ்வளவு ஆண்டுகள் தலைமை தாங்கியது இல்லை. அத்தகைய இயக்கத்தை ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். எப்படி தாங்குவாரோ என்று எதிரிகள் நினைத்தனர். ஆனால் தற்போது மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின் கழகத்தை சிறப்பாக இயக்கி வருகிறார்.
கலைஞர் எப்படி இயக்கத்தை நடத்தினாரோ அப்படியே ஸ்டாலினும் இயக்கத்தை நடத்தும் ஆற்றலை பெற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல நாட்டின் தலைவரும்தான். ஆட்சியிலும் பிரம்மிக்கத்தக்க வகையில் செயல்பட்டுள்ளார். நித்தம் ஒரு புதிய திட்டங்கள் அதை அமல்படுத்துவது; சட்டம் ஒழுங்கை சரியாக வைத்திருப்பது; அந்நிய முதலீட்டை ஈர்ப்பது என வியக்கும் அளவு ஆட்சியை நடத்தி வருகிறார். இதோடு முதலமைச்சரின் பணி நிறைவடையவில்லை. இப்பொழுது அவரை நாடு எதிர்பார்க்கிறது. இரண்டு ஆண்டுகள் தான் அவர் ஆட்சிக்கு வந்து ஆகிறது. அதற்குள் அகில இந்தியா அவரை எதிர்பார்க்கிறது. அரசியலமைப்பு சட்டம் இறையாண்மைக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தமிழ்நாடுதான் முதலில் வரும்; இந்தியாவை காப்பற்ற வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வந்துள்ளது.” எனக் கூறினார்.