ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்துவைத்தனர். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித்துறையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அதனை ஏராளமான பத்திரிகைகள் எழுதியுள்ளது. ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் செய்யமுடியாது.
திட்டமிட்டபடி திங்கள்கிழமை 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும். மீதமுள்ள வகுப்புகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தனியார் பள்ளிகளில் 100 சதவீதம் கட்டணத்தைச் செலுத்த பெற்றோர்களை தனியார் பள்ளிகள் நிபந்தனை விதிப்பதாகப் பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஏழை பெண்களின் திருமணத்திற்குத் தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு மக்களிடம் பேசிய செங்கோட்டையன், “கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இந்த எட்டுமாத காலத்தில் தனிமனித கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியிலிருந்தபோது தங்கத்தின்விலை சவரன் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரமாக இருந்தது. தற்போது தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அதனால் நிதிப் பற்றாக்குறையால் கால தாமதம் ஏற்பட்டது. இனிவருகின்ற காலத்தில் திருமணம் நடைபெறும்போதே உதவிகள் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துவருகிறார். குழந்தைகள் கல்வியாளராக வரவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமாக உள்ளது. வருகின்ற 9ஆம் தேதி, கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் நபர்களுக்காவது வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
மடிக்கணினி வழங்கும் மாநிலமும், தாலிக்குத் தங்கம் வழங்கும் மாநிலமும் தமிழகம்தான். விவசாயிகளின் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே என்று நீங்கள் எண்ணுவது எனக்குத் தெரியும். உங்கள் கடனும் ரத்து செய்யப்படும் என சூசகமாகத் தெரிவிக்கிறேன். அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாளொரு மேனியுமாக பொழுது வண்ணமுமாகத் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. இன்னும் பல்வேறு திட்டங்கள் உங்ளை நாடி வரவுள்ளது என்பதை மட்டும் நான் இந்நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
கூட்டம் முடிந்ததும் அங்கு கூடியிருந்த அதிமுகவினர் மற்றும் பெண்கள் அமைச்சர் மகளிர் சுய உதவிக் குழுவினரின் கடனைப் பற்றித்தான் சூசகமாகச் சொல்லுகிறார் எனப் பேசிக்கொண்டனர்.