![M. H. Jawahirullah](http://image.nakkheeran.in/cdn/farfuture/DVJfoDbwa4G291ZkCLEyLtZGboFte0Es56e0Zv8GJ-k/1598689557/sites/default/files/inline-images/602_62.jpg)
இராமநாதபுரம் மாவட்ட கடற்கதரையோர பகுதிகளில் எரிவாயு கிணறுகளை அமைக்க ‘இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கழகம்’ தனது ஆய்வு பணிகளை துவக்கியிருக்கிறது. இதனை கண்டித்து அறிக்கை வெளியுட்டுள்ள 'மனிதநேய மக்கள் கட்சி ' தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,
“இராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகள் கடல்சார் தேசிய பூங்கா யுனஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்ட பகுதியாகும். இந்தக் கடற்பகுதியில் அரியவகை பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் குதிரை, சங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. மேலும் ராமநாதரபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் ஆகிய ஊர்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளது. இந்த பகுதிகளை ஒட்டி தொல்லியல் ஆய்வு நடைபெற்று வரும் அழகன்குளம், ஆற்றங்கரை உட்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கழகம் (ஓ.என்.ஜி.சி.) எரிவாயு கிணறுகள் அமைக்க ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இங்கு எரிவாயு கிணறுகள் அமைக்கப்படுவதால் விவசாய நிலங்களுடன், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பல்லுயிர் பெருக்கமே ராமநாதபுரம் மாவட்டத்தில் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலையே நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரமும், விவசாயத்தை நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜ் ஜலசந்தி மற்றும் மத்திய அரசு மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதரத்தைப் பறிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு கிணறுகள் தோண்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதுடன் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போல ராமநாதபுரம் கடலோரப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.