நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி. 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த உள்ளோம்.
மணியரசனின் தலைமையில் இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். மற்றவர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு எப்போதும் உண்டு.
மத்திய அரசு தற்போது தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள சலுகைகளை கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தாக்கல் செய்யவில்லை? தனியார் முதலாளிகள் வாங்கிய ரூ.3 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் மாணவர்களின் கல்வி கடன் ரூ.65 ஆயிரம் கோடி தான் உள்ளது. அதை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். மத்திய அரசு, முதலாளிகளின் முகவர்போல செயல்படுகிறது. மக்களுக்கான நலன் பேணுகிற அரசாக இல்லை.
மத்திய அரசிடம், தமிழக அரசு தனது உரிமைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் என்பவர் பெயரளவுக்கு மட்டுமே உள்ளார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை போன்ற துணிச்சல் நமது மாநில முதல்-அமைச்சருக்கு இல்லையே என்ற வருத்தம் தான் உள்ளது என்றார்.