சிவகாசியில் கட்சி நிகழ்ச்சிக்கு வந்தபோது விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாஸ். அப்போது அவர், “ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எங்களைப் போன்ற அடையாளம் தெரியாதவர்களுக்கெல்லாம் பல உயர்ந்த பதவிகள் வழங்கி, ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என கடைசிவரை மக்கள் பணியாற்றியவருக்கு இப்பேர்ப்பட்ட ஒரு விழா என்பது, ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் வரவேற்கக் கூடிய ஒரு செய்தி.
அதிமுக ஆட்சி செய்யத் தவறியதை, திமுக ஆட்சி வந்த 100 நாளில் செய்து முடிப்பேன் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதை, முக்குலத்தோர் புலிப்படை வரவேற்கிறது. மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்று எந்த அரசியல் தலைவர் கூறினாலும் வரவேற்போம். சசிகலா தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் வீடு திரும்பியதும், அவரிடம் சந்திக்க நேரம் கேட்போம். எங்களுக்கு நேரம் ஒதுக்கும் பட்சத்தில், மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிப்போம்.
வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால், அவரைச் சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. சில கட்சிகள் கூட்டணியைத் துவக்கி உள்ளனர். சில கட்சிகள் பேரங்களை ஆரம்பித்துள்ளனர். மக்கள் அதைப் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள். அவர்கள் சொல்லக்கூடிய காரணம் வேறாக இருந்தாலும், இயக்கங்களில் நடக்கக்கூடிய பேரங்களை அறிவு சார்ந்த மக்கள் உணராமல் இல்லை. இதெல்லாம் முடிந்த பிறகு, வெளிப்படையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சிகளையும் எங்களைப் போன்ற இயக்கங்களையும் அழைத்து பேசினால்தான் கூட்டணி முடிவாகும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சசிகலா அன்பும் பற்றும் வைத்திருந்தால், அதிமுக கட்சிக்கும் அதிமுக சின்னத்திற்கும் எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் இல. கணேசன் கூறியிருப்பது, மிகவும் அபத்தமான கருத்து. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அரசியல் எனக்கு தொழில் கிடையாது. அரசியலை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கீழ்த்தரமான சிந்தனையும் எனக்கு கிடையாது. நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாயத்தை போல் இட ஒதுக்கீடு பெற்று, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு, மற்ற சமுதாயத்துக்கு வழங்கப்படுவது போல், ஜெயலலிதா 1994ல் கள்ளர், மறவர், அகமுடையாரை ஒன்றிணைத்து தேவர் சமுதாயம் என்று அறிவித்தார். ஜெயலலிதா அரசின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதிகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.
எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்பது, தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 30 லட்சம் வாக்காளர்களுக்கும் தெரிந்த விஷயமே. இதை பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதிமுகவும், அமமுகவும் இணையுமா என்ற யூகத்திற்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.
200 சதவீதம், எந்த ஒரு சமுதாயத்தின் கருத்துக்களையும் ஏற்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமுதாய மக்கள், தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடுவார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த அடிப்படை சித்தாந்தத்தில், எங்களுக்கும் அந்த உரிமை உள்ளது. எங்கள் உரிமைகளைக் கேட்கக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. எங்களுடைய 26 ஆண்டுகால கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், பிற்படுத்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படும் பட்சத்தில், அரசியல் சுயநலத்திற்காக, ஏதாவது ஒரு சமுதாயத்திற்கு, தனியாக இந்த அரசு ஏதாவது அறிவிக்குமேயானால், தமிழகத்தில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமும், நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயமும் இணைந்து தமிழகம் காணாத ஒரு போராட்டத்தைக் காண நேரிடும்” என்றார்.