அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கட்சியின் உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கில் இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
அதோடு, ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு குறித்து சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் அமர்வு முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் நாளைய விசாரணையில் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகளின்றி பொதுக்குழு நடத்த அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்தது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.