தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் சனாதனத்திற்கு எதிராகப் பேசிய உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானமாக வழங்கப் போவதாக அறிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் டெல்லி, பீகார் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசியில் நேற்று மாலை திமுக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் விழா மற்றும் தென்காசி மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இந்த திட்டங்களைப் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் பொய்யான தகவல்களை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறியதை பா.ஜ.க.வினர் பொய்யாக வேறு விதமாகத் திருத்தி மக்களிடம் பரப்பி வருகின்றனர். எது எப்படியோ சனாதனத்தை ஒழிக்கும் வரை எனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். கலைஞர் இருக்கும் போது அவரது தலையை சீவ ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது. அதற்கு அவர், ‘எனது தலையை நானே சீவி பல ஆண்டுகள் ஆகிறது’ என்று கூறினார். அதுபோல், எனது தலைக்கு 10 கோடி சன்மானம் வழங்கப் போவதாக ஒரு சாமியார் அறிவித்திருக்கிறார். அந்த சாமியாரிடம் எப்படி 10 கோடி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது என்னிடம் 500 கோடி ரூபாய் இருப்பதாக அந்த சாமியார் கூறுகிறார். அப்போது அவர் போலி சாமியார் தானே? இப்படிப்பட்ட போலி சாமியார்களை நாட்டை விட்டு அடித்து விரட்ட வேண்டும்.
பா.ஜ.க கடந்த 9 ஆண்டுகளில் என்ன சாதனை செய்தார்கள்? கலவரத்தை தூண்டி விட்டார்கள். அதுபோல், வட இந்திய மக்களை குழப்பிவிட்டு அதில் குளிர் காய முயற்சித்தார்கள். நாம் அதை முறியடித்தோம். தமிழ்நாட்டில் கலைஞர் குடும்பம் தான் ஆட்சி செய்கிறது என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான். தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் குடும்பம் தான் இருக்கிறது. ஆனால், மோடிக்கு ஒரே ஒரு நண்பர் அதானி மட்டும் தான் இருக்கிறார். சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையில் கூட ஒரு கிலோ மீட்டர் ரோட்டுக்கு எப்படி ரூ. 280 கோடி செலவு செய்திருக்க முடியும் என்று மத்திய அரசிடம் கேள்வி கேட்டுள்ளனர்” என்று கூறினார்.