15- வது தமிழக சட்டப்பேரவையின் 8 ஆவது கூட்டத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி காலை 10.00 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேரவையில் பேச அனுமதிக்காத நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவது தொடர்பான விவாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது, ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம். சிக்ஸர் அடிக்கலாம். ஏன் பவுண்டரி கூட அடிக்கலாம். ஆனால், நம் முதல்வர் ஒரே பாலில் 9 ரன் அடிப்பார். ஏற்கனவே முதல்வர் 9 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றார். தற்போது, மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்டுள்ளார்" என்று கூறினார். நம் முதல்வர் ஒரே பாலில் 9 ரன் அடிப்பார் என்று அமைச்சர் கூறிய உடன் சட்டமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்புதல் கேட்டதன் பேரில், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்து இருந்தது. அதன் பின்னர், மீண்டும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நகை ஆகிய மாவட்டங்களில் 3 மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.