ஓபிஎஸ், டிடிவி, சசிகலா இவர்கள் மூவருக்கும் அதிமுக கதவுகள் மூடப்பட்டுவிட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு முடிந்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யாகாவாராயினும் நாகாக்க என்பதன் அடிப்படையில் அனைவரையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் விமர்சனங்கள் இருக்கலாம். என் மீதும் அதிகமான விமர்சனங்கள் வருகிறது. அதற்காக நான் யார் மேலாவது கோபப்படுகிறேனா. அந்த நிலைப்பாட்டினைத் தான் அனைத்துக் கட்சிகளும் எடுக்க வேண்டும். சில பேர் மைக் முன்னாலே கூட கோபப்படுகிறார்கள். நிருபர்களைத் திட்டுகிறார்கள்.
ஓபிஎஸ், டிடிவி, சசிகலா இவர்கள் மூவரும் ஒன்றுபட்டால் அவர்களுக்குத் தான் வாழ்வு. தமிழக மக்களுக்கு வாழ்வு என்பது நிச்சயமாகக் கிடையாது. அவர்களுக்கு அதிமுக கதவுகள் மூடப்பட்டுவிட்டது. அவர்களுக்கு அதிமுக கதவுகள் திறக்கவே திறக்காது.
திமுகவினால் தான் ஆளுநர் டெல்லி சென்றார் என்று எப்படி நாம் சொல்ல முடியும். திமுக பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் போய் புகார் அளித்ததினால் தான் ஆளுநர் டெல்லி சென்றார் என்று சொல்கிறார்கள். காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்கள், அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஆளுநரைப் பொறுத்தவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல விஷயங்கள் நடந்து கொண்டுள்ளது. அதை ஆளுநர் என்பதன் அடிப்படையில் ரிப்போர்ட் செய்யச் சென்றிருக்கலாம். ஆனால், திமுக புகார் அளித்ததன் பேரில் தான் ஆளுநரை வரச் சொன்னார்கள் என்று கூறுவது எல்லாம் அனுமானம்” எனக் கூறினார்.