தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியா, ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்காக அன்வர்ராஜா தீவிர பிரச்சாரம் செய்தும் ராவியத்துல் அதபியா தோல்வியடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டும் இழந்தார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி 1,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 4,505 வாக்குகளில் ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகளும், சுப்புலெட்சுமி 2,405 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து மகள் டெபாசிட் இழந்த சோகத்தில் இருக்கும் அன்வர் ராஜாவுக்கு தற்போது அவரது மகன் நாசர் அலியும் தோல்வி அடைந்த செய்தி வெளிவந்துள்ளது. நாசர் அலி மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 6-வது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். முன்னாள் அதிமுக அமைச்சரின் மகள், மகன் இருவரும் தோல்வி அடைந்துள்ளது அவருக்கு மட்டுமின்றி அதிமுகவுக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் தனது மகன் மற்றும் மகள் தோல்வி குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜா தனியார் தொலைக்காட்சியில் தொலைபேசி வாயிலாக பேசும் போது, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக வாக்கு அளித்ததால் தோல்வி ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையின மக்கள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். அதோடு, தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது. மேலும் சிறுபான்மையினர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை பரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.