
திருச்சி மாவட்டம், தொட்டியம் யூனியன் சேர்மேனாக திமுகவைச் சேர்ந்த புனிதா ராணி என்பவர் பதவி வகித்துவருகிறார். மேலும், துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் பதவி வகித்துவருகிறார். இவருக்கு, திமுக சேர்மேன் புனிதா ராணி பதவியில் இருப்பது பிடிக்காததால் தொடர்ந்து பல இடையூறுகளை அவருக்கு கொடுத்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (15.07.2021) நடந்த யூனியன் கூட்டத்தில், வழக்கமாக நடைபெறும் கூட்ட அறையை ஏன் மாற்றினீர்கள் என்று கூறி துணை சேர்மேன் சத்தியமூர்த்தி, பிரச்சனை செய்துள்ளார். மேலும், சேர்மேன் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரையும் மற்றொரு பெண் கவுன்சிலர் சித்ரா என்பவரையும் தகாத வார்த்தைகளால் சாடியுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த 10 கவுன்சிலர்களுடன் கூட்டத்தைவிட்டு வெளியேறினார். இதனால் மீதமிருந்த 8 கவுன்சிலர்களுடன் மட்டும் கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலர் சித்ராவின் மாமனார் முத்து என்பவரை திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கவேல் தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னனி குறித்து விசாரித்ததில், தொட்டியம் யூனியன் துணை சேர்மேனாக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, திமுக மாவட்டச் செயலாளரும், முசிறி சட்டமன்ற உறுப்பினருமான தியாகராஜனின் சகோதரி மகன். தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால், தனது சகோதரி மகனை சேர்மேனாக நியமிக்க தியாகராஜன்தான் சில விஷயங்களை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், தற்போது இருக்கும் பெண் சேர்மேன் அமைச்சர் கே.என். நேருவால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தலைமையிடம் புகார் அளிக்க உள்ளதாக சேர்மேன் தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.