காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழுவை மாற்றியமைத்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி குழுவை மாற்றியமைத்து காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். 39 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கமிட்டி குழு புதியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளார்களாக தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்.பி., செல்லக்குமார் உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழு மாற்றியமைக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.