அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று (19.07.2021) தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவலை நம்ப வேண்டாம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை நடைபெற்றுவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் அதிமுக தலைமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு அப்போலோ சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவர்களிடம் மதுசூதனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தற்போது சசிகலாவும் மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். சசிகலா வருகையை அடுத்து மருத்துவமனையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ''அதிமுக மீது பற்றுகொண்ட மதுசூதனன் உடல்நலம் குன்றியதை அறிந்து நேரில் வந்து அவரைப் பார்த்தேன். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விரைவில் நலம்பெற வேண்டும்'' என்றார்.
சமீப காலமாக அதிமுகவைக் கைப்பற்றப்போவதாக சசிகலா ஆடியோ வெளியிட்டுவரும் நிலையில், அப்போலோ வந்த சசிகலா காரில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கர்நாடக சிறையிலிருந்து தமிழ்நாடு வந்தபோதும் சசிகலா அதிமுக கொடி உள்ள காரிலேயே பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.