“சிறப்பான ஆட்சி நடக்கிறது என்கிற பொறாமை கொண்டு விரக்தியை வெளிப்படுத்தவே வரும் 28ம் தேதி உரிமைக்குரல் போராட்டம் நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்” என்கிறார் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா.
நாகை மாவட்டம், நாகூர் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்தார் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவருமான ஜவாஹிருல்லா. நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலையை அதள பாதாளத்திற்குத் தள்ளிய பெருமை அதிமுக அரசுக்கு உண்டு. திமுக அரசு லாட்டரி விற்பனையை நடத்த உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய்யான புகாரைக் கூறி வருகின்றார். பொறாமை கொண்டும், தங்களின் இயலாமையைக் காட்டுவதற்காகவும், விரக்தியை வெளிப்படுத்தவுமே வருகின்ற 28ம் தேதி அதிமுகவினர் உரிமைக்குரல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வக்புவாரிய சொத்துக்களை மீட்கும் நடவடிக்கைகளை வேகமாக எடுக்கவேண்டும், வக்பு வாரிய சொத்துகளின் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிச்சயமாக திமுக அரசு இதனை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்" என்றார்.