அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விமர்சிக்கும் ஒலிப்பதிவு திங்கள்கிழமை வெளியானது. இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தங்க தமிழ்செல்வன் கூறும்போது, கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். சில விசயங்களை மாற்ற வேண்டும். சரி செய்ய வேண்டும் என்று சொன்னேன். எனது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே. என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? இதற்கு மேல் இதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
இந்த நிலையில் தேனி கர்ணன் கூறுகையில்,
பொய் பிரச்சாரம் செய்துதான் டிடிவி தினகரனை ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றார். நான் உள்பட பலர் அங்கு பிரச்சாரம் செய்தோம். டிடிவி தினகரனை நம்பி யாரும் ஓட்டுப்போடவில்லை. சசிகலாவுக்காக ஆர்.கே.நகரில் வேலை செய்தோம். தினகரன் யார் என்றே தெரியாது. தினகரன் ஒரு பச்சை சுயநலவாதி. அதனால்தான் அங்கு இருக்கும் நிர்வாகிகள் தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு சென்றுள்ளனர். தாய் கழகமான அதிமுகவுக்கு சென்றது சந்தோசம்தான். ஆனால் திமுகவுக்கு செல்லக்கூடாது என்று நினைக்கிறேன். தேனியில் சிங்கம் தங்க தமிழ்செல்வன். தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து வெளியே வந்தால் அமமுக தேனியில் சுத்தமாக அழியப்போகிறது.
இந்த ஆடியோவை தங்க தமிழ்செல்வன் வெளியிட்டிருக்க மாட்டார். நிச்சயமாக வெளியிட்டிருக்க மாட்டார். அவருக்கு சூதுவாது கிடையாது. அவருக்கு நல்ல மனசு. அப்படிப்பட்டவர் இல்லை. நான் நல்லவன், உங்களை மாதிரி அரசியல் பண்ணக்கூடாது என்று சொல்லுகிறார் பாருங்கள். அதிமுக ஒன்று சேரும். டிடிவி தினகரனால் ஒன்றுமே சாதிக்க முடியாது. தினகரன் தனிமரமாவார். அங்கு இருக்கும் நிர்வாகிகள் வெளியே வரப்போகிறார்கள். வெற்றிவேல் காங்கிரஸ்க்கு போகிறாராம். அவர் போகட்டும். அவருக்கு காங்கிரஸ் கட்சிதான் தாய் கழகம். அதில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் வெளியே வரப்போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் கிடையாது.
தேனி டிடிவி தினகரனின் கோட்டை என்று சொல்லுவது தவறு. தங்க தமிழ்செல்வனின் கோட்டை. தேனி மட்டுமல்ல திண்டுக்கல், மதுரை என தென் மாவட்டங்களில் தங்க தமிழ்செல்வனுக்கு செல்வாக்கு இருக்கிறது.
அடிக்கடி சசிகலாவின் அறிவுரையின் பேரில், அறிவிப்பின் பெயரில் என்று டிடிவி தினகரன் சொன்னது பொய். டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் சுதாகரனைத்தான் சந்திக்கிறார். சசிகலா, தினகரனை சந்திக்க விரும்பவில்லை. சசிகலாவை ஜெய் ஆனந்த் சந்தித்தார். ரொம்ப நாள் சந்திக்கவில்லை. இப்போது சந்தித்துள்ளார். அப்போது சில விவரங்களை சசிகலா கூறியுள்ளார். கூடிய விரைவில் சசிகலா வெளியே வருவார். சசிகலா வெளியே வந்தால் தினகரன் ஓடிபோய் ஒளிந்துகொள்ள வேண்டியதுதான். தினகரன் மீது அவ்வளவு கோபத்தில் உள்ளார் சசிகலா. தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து ஒதுங்கி வருவது சசிகலாவுக்கு தெரியும். இவ்வாறு கூறினார்.