தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட இரு பெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஒருபுறம் தயாராகிவரும் நிலையில், அதற்கு அடுத்தப்படியான கட்சிகளும் தமது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. உதாரணத்திற்கு, சமீபத்தில் நடந்த மநீம கட்சியின் பொதுக்குழு, தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் நடந்த ஆலோசனைக் குழு கூட்டங்கள் என தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “நாங்கள் தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் முடிவு என்னவென்று தெரியவரும். ஏற்கனவே மண்டல கூட்டம் முடிவில் அதிமுக கூட்டணியில் ஓரிரு தொகுதிகளைக் கொடுத்தால் அக்கூட்டணியில் தொடர மாட்டோம் என அறிவித்திருந்தேன். மேலும் நாங்கள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
1996ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் சரத்குமார், 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்று, 2002ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினரானார். அதன்பின் 2006ஆம் ஆண்டு திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி, தனது மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக தேர்தல் பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்.
அதே 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ராதிகா சரத்குமார் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டார் என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் அதே ஆண்டு நவம்பர் மாதம் சரத்குமாரும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவராக அக்கட்சியிலிருந்து விலகினார். அதிமுகவிலிருந்து வெளியே வந்த ஒரு வருடத்திற்குள், அதாவது ஆகஸ்ட் 2007ஆம் ஆண்டு ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அதன் பின் தேர்தல்களைக் கூட்டணி வைத்து சந்தித்து வந்தார். இறுதியாக நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார்.
இந்நிலையில் ச.ம.க.வின் மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் நடிகை ராதிகா சரத்குமாருக்குக் கட்சியில் கூடுதல் பொறுப்பாக கட்சி முதன்மை துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதேவேளையில் நடிகை ராதிகா சரத்குமார், தமிழகத்தின் பிரபலமான சின்னத்திரை தொடரான ‘சித்தி-2’வில் இருந்து விலகுவதாகவும் சரத்குமாருடன் இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், வரும் மார்ச் 3ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நடிகை ராதிகா சென்னையின் முக்கிய தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.