அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் நேற்று வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அதிமுக வரவேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவின் தொடர் போராட்டத்திற்கும், வலியுறுத்தலுக்கும் கிடைத்த வெற்றி. ஆனால் இதனை தன் வெற்றியாக திமுக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகிதம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற அதிமுக குரல்கொடுக்கும். அதேபோல் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்யவும் அதிமுக குரல் கொடுக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 'சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்' என நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.