திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் மாநாடு என்பதாலும், இந்த மாநாடு ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பேசுகையில், “கலைஞர் இருந்திருந்தால், திமுக தொண்டர்களை பார்க்கும் போது,‘நான் உங்களை பார்த்து கொண்டிருந்தாலே போதும். பேச தோன்றவில்லை’ என்று மகிழ்ச்சியோடு நிச்சயம் சொல்லி இருப்பார். இந்த மாநாட்டிற்காக இளைஞர் அணி செயலாளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளை சந்தித்து நிறைய உழைத்து இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதற்கேற்ப தாய் போல் மகிழ்ச்சியோடு பார்த்து அமர்ந்திருக்கிறார். சேலம் என்றாலே அதன் அடையாளமாக இருக்கக்கூடிய வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய கொடி மேடையில் கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கும் போது சொன்னார் நமது கொடியில் கருப்பு, சிவப்பு இருக்கிறது. கருப்பு நிறமானது சமூகத்தில் இருக்க கூடிய அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் இருக்க கூடிய இருண்ட நிலையை காட்டுகிறது. கீழே இருக்கக்கூடிய சிவப்பு என்பது இது எல்லாம் மாற வேண்டும் என்பதை குறிப்பதற்காக இருக்கிறது. இந்த கருப்பும் சிவப்பும், சிவப்பு நிறமாக மாற வேண்டும் என்றால் உதயசூரியன் ஒளியாலே விரட்டி அடிக்கப்படும் என்று தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், அண்ணாவின் கனவு, கலைஞரின் வழியில் ஏறத்தாழ நிறைவேறி விட்டது. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் கேட்கலாம் எல்லாம் மாறிவிட்டது இன்னும் ஏன் கொடியில் கருப்பு இருக்கிறது என்று. கொடியில் உள்ள கருப்பு நிறத்தை மாற்றிவிடலாம். ஆனால் வட இந்தியாவில் நிலைமை வேறுமாதிரி உள்ளது. தென்னகத்திலே இருக்கக்கூடிய தமிழ்நாட்டிலேயே சிவப்பு வந்துவிட்டது. ஆனால், வட நாட்டிலே இன்னும் கருப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதை விரட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்த கருப்பை விரட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் இருந்து அனைவரையும் ஒருங்கிணைத்து சென்று கொண்டிருக்கிறார்.
நாளை வட இந்தியாவில் அயோத்தி ராமர் கோவில் திறப்பிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது குறித்து நான் பேச விரும்பவில்லை. ஒரு கோவிலை முழுமையாக கட்டி முடிக்காமல் திறக்க கூடாது என்கிறது இந்து மதம். ஆனால், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டும் அவசர அவசரமாக பாஜக கோவிலை திறக்கிறது. இது குறித்து யார் கேள்வி கேட்டாலும் ஐஸ் வைப்பார்கள். ஐஸ் என்பது வருமான வரித்துறை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை. இதைப் பற்றி தமிழகத்தில் யாரும் பயப்படவில்லை. தமிழகத்தை பாஜக அரசு வஞ்சிக்கிறது. விரைவில் ஒரு மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் இந்த மாற்றம் வந்தால் போதாது. இந்தியாவிற்கே மாற்றம் வர வேண்டும், மக்களால் தான் இந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும். அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும். தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” எனப் பேசினார்.