
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி.யும் மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்றபோது, சென்னை கூடுவாஞ்சேரி அருகே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
மஸ்தானின் முகத்தில் காயம் இருந்ததால் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் இந்த வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில், மஸ்தானின் உறவினர்களே அவரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது அம்பலமானது. இது தொடர்பாக மஸ்தானின் கார் டிரைவர், மஸ்தானின் உறவினரான சித்தா டாக்டர் சுல்தான், அவரது நண்பர்கள் நசீர், தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையின் விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக ஐந்து பேரும் திட்டமிட்டு மஸ்தானை கொலை செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் கடந்த வருடம் டிசம்பர் 22ஆம் தேதி மஸ்தான் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது ஊரப்பாக்கம் அருகே அவரது டிரைவரின் உதவியுடன் கொலை செய்துள்ளனர். இதன் பின் நெஞ்சுவலியால் மஸ்தான் இறந்ததாக அவரது டிரைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக காவலர்கள் நடத்திய விசாரணையில் மஸ்தானை கொலை செய்யத் திட்டமிட்ட அவரது கார் டிரைவர், மூச்சுத் திணறலால் மாரடைப்பை ஏற்படுத்துவது எப்படி என இணையத்தில் தேடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினரின் தொடர் விசாரணையில், மஸ்தான் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது தம்பி கௌசே ஆதாம்பாஷா கைது செய்யப்பட்டார். மஸ்தான் கொலை வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கௌசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த செல்போன் உரையாடல் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினர் கௌசே ஆதாம்பாஷாவினை கைது செய்தனர். காவல்துறையினரிடம் ஆதாம்பாஷா வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 5 லட்சம் ரூபாய் கடனைத் திரும்பக் கேட்டதால் நண்பர்களின் உதவியுடன் அண்ணனைக் கொன்றதாகவும், பூர்வீக சொத்துத் தகராறு மற்றும் பணப் பிரச்சனையே மஸ்தான் கொலைக்கு முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், மஸ்தானின் தம்பியை காவல்துறையினர் விசாரித்ததில் மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினா (26) இந்த கொலையில் தந்தைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் ஹரிதா ஷஹினாவையும் கைது செய்தனர். தற்போது வரை மஸ்தான் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.