
மீனவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஒன்றிய அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்கக் கோரியும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நியாயமானது. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அனைத்து கட்சிகளும் மனித நேய மக்கள் கட்சி உட்பட இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தோம்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலினும், பிரதமர் மோடிக்குப் பலமுறை கடிதம் எழுதியும் அழுத்தம் தந்தார். ஆனால் ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சனையில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாட்டு மீனவர்களின் காத்திருப்பு போராட்டம் நியாயமானது. அவர்களின் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்று தெரிவித்திருக்கிறார்.